Tuesday 6 October 2015

கொல வெறிப் பாடலும் ஆசிரியை கொலையும் இரா.உமா

ஒரு சில மாதங்களாக, குழந்தைகள், சிறியவர், பெரியவர் என்றில்லாமல் அனைவரின் வாயிலிருந்தும் ஒரு பாடல் வரி தன்னிச்சையாக வந்து விழுகிறது. அனைவர் வாயிலிருந்தும் வருகிறதா ! ஒரு வேளை பெரிய அறிஞரின் மேற்கோளாக இருக்குமோ என்றெல்லாம் கற்பனையில் மூழ்கிவிட வேண்டாம். "ஒய் திஸ் கொலவெறி...!' இதுதான் அந்த புகழ்பெற்ற பாடல் வரி.
நடிகர் தனுஷ் பாடிய திரைப்படப் பாடலின் முதல் வரிதான் இந்தக் கொலவெறி. பாடல் இடம்பெற்ற படம் "3'. மூன்று படங்கள் அல்ல, படத்தின் பெயரே இதுதான் - 3 என்னும் எண். "ஒய் திஸ் கொலவெறி... கொலவெறி...கொலவெறி..கொலவெறிடி' என்று தொடங்கும் அந்தப் பாடல் தமிங்கலத்தில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பாடல் தமிழைக் கொலை செய்கிறது, மொழியைச் சிதைக்கிறது, வன்முறையைத் தூண்டுகிறது, குழந்தைகளின் மனத்தில் நச்சுக் கருத்துகளை விதைக்கிறது என்கின்ற விமர்சனங்கள், எதிர்ப்புகள் எல்லாவற்றையும் தாண்டி, அந்தப் பாடல் தேசிய அளவில் புகழ்பெற்று விட்டது என்பது வேறு கதை.
எல்லாவற்றிலும், எதற்கெடுத்தாலும் "ஒய் திஸ் கொலவெறி' என்று சொல்வது இன்று வாடிக்கையாகியிருப்பதை அந்தப் பாடலுக்குக் கிடைத்த பெருமையாகக் கருத முடியாது. அதன் பொருள் புரியாமல்தான் குழந்தைகள் அதைப் பாடுகிறார்கள், என்றாலும் கூட, அந்தச் சொல் அவர்கள் மனத்தில் பதிந்து விட்டது. குழந்தைகளின் உலகத்தில் இல்லாத ஒன்றை, இசை என்னும் கலை வடிவத்தைப் பயன்படுத்தி விதைத்து வருகின்றனர். இவையயல்லாம் வெற்றுச் சொற்கள்தானே (empty words) என்று அலட்சியப்படுத்தி விட முடியாது. "இறந்துபோன செல்கள்' தான் புற்றுநோய்க்குக் காரணமான கேடுவிளைவிக்கும் கழலைகளை (Malignant tumours) உண்டாக்கு கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்தப் பாடல் பற்றிய விவாதத்தில், இது புதிய இசை வடிவம், ரசிகர்களின் ரசிப்புத் தன்மை மாறி வருகிறது அதற்கேற்றவிதத்தில் பாடல்களை அமைப்பதில் என்ன தவறு என்பது போன்று கருத்துகள் முன் வைக்கப்பட்டன. "அதிநவீனத்துவவாதி'யான சாருநிவேதிதா "இசையின் புனிதத்தை உடைக்கிற முயற்சிதான் இதுபோன்ற பாடல்கள்... நவீனத்தை வரவேற்க வேண்டும்' என்று சொன்னார். உடைக்க வேண்டிய புனிதங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அங்கெல்லாம் இவர்கள் மூக்கை நுழைப்பதில்லை. சொல்ல வருவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள முடியாதபடி சொல்வதுதான் இவர்கள் சொல்லும் நவீனத்துவம் போலும்.
girl_250_copyஅண்மையில் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியை உமாமகேசுவரியை, பாடம் நடத்திக்கொண்டிருக்கும் போதே, இர்பான் என்னும் மாணவன் கத்தியால் குத்திக் கொலை செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சிக் குள்ளாக்கியது. அந்த மாணவன் அக்னிபாத் என்னும் இந்திப் படத்தை அடிக்கடி டிவிடியில் போட்டுப் பார்த்திருக்கிறான். அதில் வரும் கொலைவெறி பிடித்தலையும் ஒரு கதாபத்திரம் இவனை ரொம்பவும் கவர்ந்திருக்கிறது. இதுவும் இந்தக் கொலையைச் செய்ய ஒரு தூண்டுதலாக இருந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
திரைப்படங்கள் இளைஞர்களிடையே வன்முறையைத் தூண்டு கின்றன, சமூகத்தைச் சீரழிக்கின்றன என்பது ஒரு பக்கத்தில் சொல்லப் படும் குற்றச்சாட்டு. சமூகத்தில் நடப்பதைத்தானே நாங்கள் திரைப் படத்தில் காட்டுகிறோம் என்பது திரைத்துறையினர் சொல்லும் விளக்கம். இது ஏறத்தாழ, "காற்றுவந்ததும் கொடி அசைந்ததா, கொடி அசைந்ததால் காற்று வந்ததா' என்ற வகையைச் சேர்ந்தது. திரைப்படங்களில் பேசப்பட வேண்டிய சமூகப் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கின்றன. இரத்தம் நம் உடலுக்குள்ளே இருக்கிறது என்பதைக் காட்ட, அதை வெளியில் எடுத்து ஓடவிடுவது புத்திசாலித்தனம் ஆகுமா?
குடும்பப் பொறுப்புள்ள கதாநாயகனைக் காட்டிய திரைப்படங்கள், "போக்கிரி'யாகவும், "பொல்லாதவனா'கவும் காட்டுகின்றன. தாதா ஹீரோயிசம் திரைப்படங்களில் போற்றி வளர்க்கப்படுகிறது. "நல்லாப் படிடா, படிப்புதான்டா நாளைக்கு சோறுபோடும்'' என்று சொல்லும் பெற்றோரிடம், "வராத படிப்ப வா வான்னா எப்படி வரும்?'' என பொல்லாதவன் படத்தில் தனுஷ் பேசிய வசனத்தைச் சொல்கின்றனர் பிள்ளைகள். தேர்வு நெருங்குகிறது எனவே சிறப்பு வகுப்பு எடுக்கப்போகிறேன் என்று ஆசிரியர் சொன்னால், "ஒய் திஸ் கொலவெறி டீச்சர்'' என்று கேட்கின்றனர் மாணவர்கள்.
"வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
............
என் பொண்டாட்டி பொண்டாட்டி ஐ லவ் யூ டில் யூ ஆர் எ பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி எனக்குத் தேவையில்ல வப்பாட்டி''
இது ஒஸ்தி படத்தின் பாட்டு. இதுவும் நீக்கமற எல்லோராலும் பாடப்படுகிறது.
சூத்திரர்களாக்கி நம்மை இழிவு படுத்திய சொல்லை, இசை என்ற கலை வடிவில் நம் தலைமுறைகளை உச்சரிக்க வைத்துவிட்டனர். இவர்களைக் கலைஞர்கள் என்றும், அவர்கள் பிழைப்புக்காகக் கையாள்கின்ற "கருத்தியல் வன்முறை உத்தி'யைக் கலை என்றும் ஏற்றுக்கொள்ள முடியுமா? இதுதான் சாருநிவேதிதா, தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் சொல்லும் புனிதத்தை உடைக்கும் வழியா, பழைமையைத் தகர்க்கும் நவீனத்துவமா?
"மயக்கம் என்ன' என்றொரு படம். அதில் ஒரு பாட்டு,
"அடிடா...அவள, ஒதடா...அவள' என்கிறது.
"எவன்டி பெத்தான் உன்ன
அவன் கையில கெடச்சா செத்தான்' - இது இன்னொரு பாட்டு.
"கலை எனப்படுவது இனப்படுகொலை என்றால்...' என்ற எஸ்.வி. ராஜதுரையின் நூல் தலைப்பைத்தான் இதுபோன்ற திரைப்படங்களும், பாடல்களும் நமக்கு நினைவூட்டுகின்றன. குறைந்த பட்ச சமூக அக்கறைகூட இல்லாதவர்களால் திரைப்படக்கலை என்பது ஆபத்தான ஆயுதமாக மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.
இது காட்சி ஊடகங்களின் காலம். தொலைக்காட்சி, இணையத்தளம், வலைத்தளங்கள் போன்றவை வேண்டியவை வேண்டாதவை என எல்லாவற்றையும் நம் வீட்டிற்குள்ளே கொண்டுவந்து குப்பையைப் போலக் கொட்டுகின்றன. நம்முடைய குழந்தைகள் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பார்க்கக் கூடாது என்பதில் பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டும். வீடியோ கேம்ஸ் எனப்படும் விளையாட்டுகளிலும், கணினியில் ஆடும் விளையாட்டுகளிலும் கூட வினை விதைக்கப்படுகிறது.
விப் த வொர்க்கர் (whip the worker) என்றொரு விளையாட்டு கணினியில் இருக்கிறது. ஒரு மனிதனின் முகத்தில் இரண்டு கைகளாலும் மாறி மாறிக் குத்துவிடுவதுதான் அந்த விளையாட்டு. நம்முடன் வேலை பார்ப்பவர்களில், நாம் அடிக்க விரும்பும் மனிதரை அடிப்பதாக நினைத்துக் கொண்டு இந்த விளையாட்டை விளையாடினால் நமக்கு மன அழுத்தம் குறையும் என்கிறது இந்த விளையாட்டின் அறிமுகப் பகுதி. சக மனிதனை அடிப்பதும், அவன் அடி வாங்குவதைக் கண்டு கைதட்டி மகிழ்வதும் இவர்களுக்கு விளையாட் டாகப் போய்விட்டது.
இந்த மனநிலையில் வளர்க்கப்படும் பிள்ளைகள், எவன் செத்தால் எனக்கென்ன, என்னுடைய மகிழ்ச்சிதான் எனக்கு முக்கியம் என்று நினைக்கின்ற சுயநலவாதிகளாக உருவாவார்கள். இன்னும் சில விளையாட்டுகள் ஒரு பக்கச் சார்பான சிந்தனையை பிள்ளைகளிடம் வளர்க்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. சான்றாக ஒரு விளையாட்டு: பாறைகள் நிறைந்த ஒரு நிலப்பகுதி. அந்தப் பாறைகளின் பின்புறம் இருந்து பின்லேடன் வெளியே வருகிறார். அப்படி வரும்போது அவரைத் துப்பாக்கியால் சுட்டுச் சிதறடிக்க வேண்டும். இப்படி எத்தனை முறை பின்லேடனைக் கொல்கிறோம் என்பதைப் பொறுத்து வெற்றிப் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.
பின்லேடனை தீவிரவாதியாக மட்டுமன்று, இசுலாமிய மதத்தின் ஓர் அடையாளமாகவும் சித்தரித்து வைத்திருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, இந்த விளையாட்டின் நோக்கம் என்னவாக இருக்க முடியும் என்பதையும், இதை வடிவமைத்தவர்கள் யார் என்பதையும் நாம் விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.
குற்றவாளிகளில் 90 விழுக்காட்டினர் 25 வயதிற்குட்பட்டவர்கள் என்கின்றன புள்ளி விவரங்கள். சிறு வயதிலேயே இத்தனை புறத்தாக்கு தல்களுக்கு உள்ளாகும் குழந்தைகள், பெரியவர்களாகும் போது ஆபத்தானவர்களாக மாறிவிடுகின்றனர். போலச் செய்தல் (இமிடேசன்) குழந்தைகளின் இயல்பு. எனவே முதல் கவனிப்பும், அக்கறையும் வீட்டிற்குள்ளிருந்தே தொடங்க வேண்டி யிருக்கிறது. சொத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம். பாதுகாக்க வேண்டிய கூடுதல் பொறுப்பும் நமக்குத்தான்.

ஆண் காவல் - இழிவான காரியம் ---- இரா.உமா

மார்ச் - 8 உலக பெண்கள் நாள்
மனித இனத்தின் நீண்ட நெடிய வரலாற்றின் பக்கங்கள் மிகப்பெரும் பான்மையும் ஆண்களால் மட்டுமே நிரம்பி இருக்கின்றன. மிச்சப்பட்டு நிற்கின்ற மிகச்சில பக்கங்களில் வாழ்கின்ற பெண்களும்கூட ஏதோ ஒரு புள்ளியில் ஆணாதிக்கத்தின் மிச்ச சொச்சங்களைச் சந்தித்தே, தன் இருப்பை உறுதிசெய்து கொண்டிருக்கின்றனர். காரணம் முடிவெடுக்கின்ற, தீர்மானிக்கின்ற இடத்தில் ஆண்கள்தான் இருந்து கொண்டிருக்கின்றனர்.
சமுதாய முன்னேற்றத்திற்கு முதன்மையான தடையாக இருப்பவை இரண்டு ஆதிக்கங்கள் என்பதை நாம் அறிவோம். ஒன்று சாதி ஆதிக்கம், மற்றொன்று ஆணாதிக்கம். பெண்களின் முன்னேற்றத்திற்கும் அவர்களின் விடுதலை உணர்வுக்கும் தொடர்ந்து வேட்டுவைத்துக் கொண்டிருப்பவை இவை இரண்டும்தான். நாட்டின் மக்கள் தொகையில் சரிபாதியாக இருக்கின்ற பெண்கள் சமமாக நடத்தப்படாத நாடு முன்னேறாது.
‘என்ன இப்படிச் சொல்கிறீர்கள்? இந்த அறிவியல் உலகத்தில் பெண்கள் நுழையாத துறைகளே இல்லையே ! விண்வெளியில் கூடப் பறக்கிறார்கள். சுதந்திரம் இல்லாமலா இதையயல்லாம் செய்ய முடிகிறது அவர்களால். இன்னும் பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம் பற்றிப்பேசுவது தேவையற்றது’ - இப்படிப் பலர் பேசுகிறார்கள். சிறு விழுக்காட்டினரின் வளர்ச்சியைக் காட்டி, ஒட்டுமொத்தப் பெண்கள் சமூகமும் வளர்ச்சியின் உச்சத்தைத் தொட்டு விட்டதைப் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர். இதன் மூலம் பெண்களின் உணர்வுகள் வடிந்து, இவர்கள் காட்டும் இந்த வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ள வலியுறுத்துகின்றனர் என்றே சொல்லவேண்டும்.
ஆணாதிக்கச் சட்டத்தில் அறிவியலுக்கு இடமில்லை, ஆதிக்கத்திற்கும், அடிமைத் தனத்திற்கும் தான் இடமிருக்கிறது என்பதை 18/20.02.2012 ஆகிய இரண்டு நாள்களில் நாளேடுகளில் வெளி வந்த கீழ்க்கண்ட செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
செய்தி 1: ஆடி மாதத்தில் கருத்தரித்ததற்காக கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.
செய்தி 2: தன்னுடைய அனுமதி இன்றித் தன் மனைவி கருத்தடை சாதனம் பொருத்திக் கொண்டதால், ஆத்திரமடைந்த கணவன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்குளிக்க முயற்சி.
இந்த அறிவியல் உலகத்தில் பெண்ணடிமை ஏது என்பவர்கள், முதல் செய்திக்கு என்ன நியாயம் சொல்லப் போகிறார்கள்? ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும். சித்திரை வெயில் சிசுவுக்கு ஆகாது என்பதால் அந்தக் காலத்தில் ஆடியில் கருத்தரிக்கக் கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இன்று கருத்தரிக்காமல் இருப்பதற்குக் கருத்தடை சாதனங்கள் இருக்கின்றன. அப்படியே கருத்தரித்தாலும் வெயிலை விரட்டக்கூடிய மின்விசிறி இல்லாத வீடே இல்லை. இதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். அந்தப் பெண் கருத்தரித்ததில் அவள் கணவனுக்குப் பங்கில்லையா? திருமணம் என்னும் வியாபாரத்தில் ஆணும் பெண்ணும் பங்குதாரர்கள் என்பார் தந்தைபெரியார். அந்த வியாபாரத்தில் ஏற்படும் இலாபம், நட்டம் இரண்டிற்கும் இருவரும்தானே பொறுப்பாளிகள். ஆனால் இங்கே பெண் மட்டும் கொடூரமான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள்.
எப்போதும் ஆண்களின் குற்றங்களுக்கும், தவறுகளுக்கும், பெண்கள் தார்மீகப் பொறுப்பேற் கின்ற வகையில்தான் குடும்ப அமைப்புகள் இருந்து வருகின்றன. குடிகாரக் கணவனைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். சூதாடியைச் சகித்துக்கொள்ள வேண்டும். வீட்டுப்பேச்சு வெளியில் போகாமல் குடும்பம் நடத்துவதுதான் நல்ல மனைவிக்கு இலக்கணம். இலக்கணம் கொஞ்சம் மாறினாலும், அவள் குடும்பப் பெண் என்னும் தகுதியை இழந்தவளாகி விடுவாள். அதிலும் இந்த ‘குடும்பப் பெண்’ என்கிற பதம் இருக்கிறதே, இது பெண்களுக்கு வழங்கப்படும் சிறப்புப்பட்டம் போன்றது. ஓர் ஆணைப் பார்த்து யாரும், ‘அட குடும்ப ஆண் போலத் தெரிகிறாரே’ என்று சொல்வதில்லை.
இரண்டாவது செய்திக்கு வருவோம். இக்கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல, முடிவெடுக்கின்ற அதிகாரம், தீர்மானிக்கின்ற உரிமை ஆணிடம்தான் இருக்க வேண்டும் என்கின்ற ஆணாதிக்க சமூகத்தின் விதியை இச்செய்தி உறுதிப்படுத்துகிறது. பெண்ணுக்கு முடிவெடுக்கின்ற உரிமை இல்லை என்பதே குடும்ப நடைமுறையில் நாம் காணுகின்ற உண்மை.
women_370பெண்களின் முன்னேற்றத்திற்குக் குழந்தைப்பேறு தடையாக இருக்கிறது என்றார் பெரியார். காரணம் குழந்தை வளர்ப்பு முழுக்க முழுக்கப் பெண்களின் கடமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. மனைவியைக் கருத்தரிக்க வைப்பது மட்டுமே ஆண் என்று சொல்லிக் கொள்கின்ற கணவனின் வேலையாக இருக்கிறது. கருவைச் சுமப்பது, பேறுகால வேதனையைத் தாங்குவது, இரவு பகல் கண் விழித்துக் குழந்தையை வளர்ப்பது என அத்தனை சுமைகளையும் தாங்குவதற்குப் பெண் மட்டுமே விதிக்கப்பட்டிருக்கிறாள்.
எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும், குழந்தை வேண்டுமா வேண்டாமா என்பதைப் பெண் தீர்மானிக்க முடியாது. மனைவியின் உடல் மீது கணவனுக்குத்தான் சகல அதிகாரங்களும் இருக்கின்றன. தன் உடல் நலத்தை முன்னிட்டு கருத்தடை சாதனம் பொருத்திக் கொள்ளக்கூட கணவனின் அனுமதி இன்னும் இங்கே தேவைப்படுகிறது. இந்தக் கணினி உலகத்தில் இன்னும் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் என்று பேச்சுக்கள் பொருளற்றவை எனச்சொல்லும் அறிவாளிக் கூட்டங்கள் இரண்டாவது செய்திக்குத் தரும் பதில் என்ன?
எதன் தொடக்கமும் ஆண் என்ற கணவனிடமிருந்துதான் தொடங்க வேண்டும் என்பது விதியாக்கப்பட்டு, அதைப் பெண் என்ற மனைவியையும் ஏற்கச் செய்திருக்கிறது ஏற்றத் தாழ்வுள்ள இந்தச் சமூகம். எங்கும் எதிலும் மனைவியின் விருப்பம் கேட்கப்படுவதில்லை. ஆணாதிக்கம் என்பது பொதுப்புத்தியில் ஆழப்புதைந்து கிடக்கும் கேவலமான எண்ணம். படித்தவர்கள், படிக்காதவர்கள், பக்திமான்கள், பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் என அனைத்துத் தரப்பிலும் இந்த எண்ணம் பதிந்துகிடக்கிறது.
பெண்ணுரிமைக்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கும் போராடிய திராவிட இயக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், நம்மைநாம் தன் ஆய்வுக்கு உட்படுத்திக் கொள்வது தேவையான ஒன்றாக இருக்கிறது. உண்மை கசந்தாலும், வேதனையோடு ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மேடைகளில் பேசுகின்ற பெண் உரிமை, வீட்டில் மறுக்கப்படுகின்ற நிலையைப் பார்க்க முடிகிறது. நான் அனுமதிக்கும் எல்லை வரைதான் உனக்கான சுதந்திரம் செல்லுபடியாகும் என்ற ஆணாதிக்கம் முற்போக்காளர்களாகவும், பெரியாரியல்வாதிகளாகவும் தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்களிடமும் கூடத் தவிர்க்க முடியாத ஒன்றாகப் படிந்து கிடக்கிறது.
ஆடி மாதத்தில் கருத்தரித்த மனைவியைக் கொன்றவனும், தன்னைக் கேட்காமல் மனைவி கருத்தடை சாதனம் பொருத்திக்கொண்டதால் தீக்குளிக்க முயன்றவனும், தங்கள் செயல் பெண்ணுரமைக்கு எதிரானது, ஆணாதிக்கப்போக்கு என்பதை கோட்பாட்டு ரீதியாக அறிந்திருக்க நியாயமில்லை. அப்படியானால் அனிச்சை செயல்போல இப்படி நடந்துகொள்வதற்கு அவர் களைத் தூண்டியது எது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
பெண்ணானவள் ஆணுக்குக் கீழானவள், சொந்தக் கருத்துகளோ, விருப்புகளோ வைத்திருக்கக் கூடாதவள் என்று காலங்காலமாக இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்த கற்பிதங்களின் தன்னிச்சையான விளைச்சல்கள் இவர்கள். புரையோடிப்போன ஆதிக்கச் சமூகத்தில், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் தங்கள் அடிமைத்தனத்தை உணர முன்வராததும், அதுதான் உலகத்தோடு ஒட்ட ஒழுகும் வாழ்க்கைமுறை என்று கருதிக்கொண்டிருப்பதுமான நிலையே இதுபோன்ற அவலங்களுக்குக் காரணமாக இருக்கின்றன.
“பெண்கள் சுதந்திரத்திற்கும், பெண்கள் விடுதலைக்கும் அவர்கள் மனப்பான்மை சற்று மாறியேயாகவேண்டும். நான் அடிமையாய்த்தான் இருப்பேன்; நீ மாத்திரம் எனக்கு எஜமானனாய் இருக்கக்கூடாது என்பதில் அர்த்தமே இல்லை” என்று அய்யா பெரியார் சொன்னதைப்போல, தங்கள் எண்ணங்களில் தெளிவு பெறப் பெண்கள் முயலவேண்டும். பெண்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணங்களிலிருந்து ஆண்கள் விடுதலைபெற வேண்டும். சக மனு´யான பெண்ணை அவமானப்படுத்துவதோடு, தாங்களும் கேவலப்பட்டு நிற்கின்ற நிலையைத் தவிர்க்க வேண்டும். இதைத்தான் பெரியார் இப்படிச் சொன்னார்: பெண் தன்னைக் காத்துக்கொள்ளும் தகுதி பெற்றுக்கொள்ள விட்டுவிட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. அது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.
நூற்றாண்டைக் கடந்து எழுச்சியூட்டிக் கொண்டிருக்கும் மகளிர் நாள் நிகழ்வுகள் அரங்குகளுக்குள்ளேயே முடிந்து போய்விடாமல், மக்களைத் தேடி, குறிப்பாகக் கிராமங்களைத் தேடிச் செல்ல வேண்டும். பெண்ணியவாதிகளும், சமூக விழிப்புணர்வு இயக்கங்களும் தங்கள் செயல்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தினால் ஒழிய, இன்றைய நிலை மாறாது.

ஒரு போராளியை - ஓர் அறிவாளியை இழந்தது நாடு ----- இரா.உமா

மார்ச் 23, மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள். அவரோடு, சுகதேவ், ராஜகுரு ஆகியோரும் அன்றுதான் வெள்ளை அரசாங்கத்தால்  தூக்கிலிடப்பட்டனர். ஒரு புரட்சிவீரனை மட்டுமன்று, ஓர் அறிவாளியை இந்நாடு இழந்ததும் அன்றுதான்.
விடுதலைக்காகப் போராடும் ஆயுதம் ஏந்திய புரட்சியாளர்கள், வன்முறையை மட்டுமே அறிந்தவர்கள் என்ற கண்மூடித்தனமான கருத்து ஒருபக்கம் நிலவி வருகின்றது. இக்கருத்து, யாருடைய அடக்குமுறைகளுக்கு எதிராகப் புரட்சி முன்னெடுக்கப்படுகிறதோ அவர்களால் பரப்பப்படுகின்ற பொய் என்பதற்கு நம்மால் பல சான்றுகளை முன்வைக்க முடியும். புரட்சியாளர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று காரியமாற்றுபவர்கள் அல்லர். அவர்கள் ஆழமான வாசிப்புத் தன்மை உடையவர்கள். இந்தப் பூமிப்பந்தில் நடைபெற்ற பல்வேறு விடுதலைப் போராட்டங்களின் வரலாறுகளைப் படித்துத் தெளிந்தவர்கள். “வரலாறு எனக்கு வழிகாட்டி'' என்று விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் சொல்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
bhavathsingh_370பகத்சிங்கிற்குப் புத்தகங்களைப் படிப்பதில் இருந்த ஆர்வத்தை அவருடைய வரலாறு நமக்குக் காட்டுகிறது. தூக்கு மேடைக்குச் செல்வதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, லெனின் எழுதிய ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருந்திருக்கிறார். தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்த காவலர்களிடம், கொஞ்சம் பொறுங்கள், ஒரு புரட்சியாளன், இன்னொரு புரட்சியாளனைச் சந்தித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்ன துணிச்சல் மிக்க அறிவாளி பகத்சிங்.
சிறையில், புத்தகங்களை வாசிப்பதில் அதிகப்படியாக நேரத்தைச் செலவிட்டிருக்கிறார். புகழ் பெற்ற வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்களின் புத்தகங்களைத் தேடித்தேடிப் படித்திருக்கிறார்.
1930இல் லாகூர் மத்திய சிறையில் இருந்தபோது, தன் பள்ளித் தோழன் ஜெயதேவ் குப்தாவிற்கு எழுதிய கடிதம், பகத்சிங்கின் அறிவுத்தேடலுக்கும், புத்தக தாகத்துக்கும் சான்றாக இருக்கிறது. அந்தக் கடிதம் அப்படியே கீழே:
லாகூர் மத்திய சிறைச்சாலை,
24.07.1930
என் அருமை ஜெயதேவ்,
துவாரகதாஸ் நூலகத்திலிருந்து, என் பெயரில் கீழ்க்காணும் நூல்களைப் பெற்று, குல்வீர் (பகத்சிங்கின் தம்பி) மூலமாக, அவற்றை ஞாயிறன்று அனுப்பவும்.
1.  Militarism (Kari Liebknecht)
2.  Why men fight (B.Russel)
3.  Soviets at work
4.  Collaps of the Second International
5.  Left - wing Communism
6.  Mutual aid (Prince Kroptokin)
7.  Fields, Factories and Workshops
8.  Civil War in France (Marx)
9.  Land Revolution in Russia
10. SPY (Upton Sinclair)
பஞ்சாப் பொதுநூலகத்திலிருந்து, இன்னொரு நூலையும் தயவு செய்து அனுப்பவும்.
1.Historical Materialism (Bakkunin)
மேலும், போர்ஸால் சிறைச்சாலைக்கு, சில நூல்களாவது அனுப்பப்பட்டுள்ளனவா என்பதை, நூலகர் மூலம் அறிந்து கொள்ளவும். கடுமையான பஞ்சத்தை அவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். சுகதேவின் சகோதரர் ஜெயதேவ் மூலம், அவர்கள் ஒரு புத்தகப் பட்டியலை அனுப்பியிருந்தார்கள். இதுவரை அவர்கள் எந்த நூலையும் பெறவில்லை. ஒருக்கால், அவர்களிடம் அப்பட்டியல் இல்லையாயின் லாலா பெரோஷ் சந்திடம் அவர் விரும்பும் சில நூல்களை அனுப்பும்படி தயவுசெய்து கேட்டுக்கொள்க. இந்த ஞாயிறு, நான் அங்கு போவதற்கு முன்பு, புத்தகங்கள் அவர்களைச் சென்றடைந்திருக்க வேண்டும்.
இது மிக முக்கியமான பணி. தயவு செய்து மனதில் கொள்க.
மேலும் டாக்டர் ஆலத்திற்கு, வறுமையிலும், கடனிலும் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் இரண்டு அல்லது மூன்று புத்தகங்களை அனுப்புக. தொந்தரவு கொடுப்பதற்கு என்னை மன்னிப்பாய் என்று நம்புகிறேன். இனிமேல் உறுதியாக உனக்குத் தொல்லை தர மாட்டேன். நம்முடைய எல்லா நண்பர்களுக்கும் என்னை நினைவுபடுத்துவதோடு, லஜபதிக்கு என் மரியாதைகளைத் தெரியப்படுத்தவும். தத்தின் சகோதரி வந்தால், என்னைப் பார்க்க மறக்கமாட்டாள் என்று உறுதியாக நான் அறிவேன்.
                                                                          மரியாதைகளுடன்
                                                                                   பகத்சிங்
இக்கடிதத்தில் அவர் பட்டியலிட்டிருக்கின்ற புத்தகங்களே அவருடைய சீரிய சிந்தனைகளுக்குச் சான்று பகர்கின்றன.   எப்போதும் சாதி, மத, வர்க்க வேறுபாடுகளற்ற சமத்துவ சமூகம் பற்றியே சிந்தித்திருக்கிறார் அந்த வீரமகன்.
பகத்சிங்கின் விடுதலைப்போராட்ட நுழைவு, அக்களத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை வரலாற்றாசிரியர் வி.டி.மகாஜன் இப்படிப் பதிவு செய்திருக்கிறார்:
“பாரத மாதாவுக்கு ஜே! வந்தே மாதரம், ஓம் ராம் ஹரி, அல்லாஹு அக்பர், சத் ஸ்ரீ சகால் முதலிய முழக்கங்கள், இன்குலாப் ஜிந்தாபாத், ஏகாதிபத்தியம் ஒழிக, பாட்டாளி வர்க்கம் நீடுழி வாழ்க போன்ற முழக்கங்களால் இடம் பெயர்க்கப்பட்டன......பகவத் கீதையிலிருந்தும், விவேகானந்தர், அரவிந்தர், பங்கிம்  சந்திரர் ஆகியோரின் எழுத்துகளிலிருந்தும் ஊக்கம் பெற்றுக்கொண்டிருந்த புரட்சியாளர்கள், மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுத்துகளின் மூலம் அவர்களின் ஊக்கத்தைப் பெற்றனர்''.
தான் படித்ததோடு நின்றுவிடாமல், சக தோழர்களையும் படிப்பதற்கு ஊக்கப்படுத்தியிருக்கிறார். தான் படித்ததை அவர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தத் தொடர் வாசிப்பே அவரைப் பண்பட்ட புரட்சியாளராக உருவாக்கியிருக்கிறது.
பகத்சிங் தன்னை நாத்திகர் என்று அறிவித்துக் கொண்டவர். இந்நிலைக்கு அவர் உடனடியாக வந்துவிடவில்லை. தான் படித்த புத்தகங்களே தன் சிந்தனையைத் தெளிவாக்கின என்பதை இதோ அவரே கூறுகிறார்:
“பக்குனின் என்பவரின் நூல்களைக் கற்றேன். பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். ஏகச் சக்ராதிபத்திய ஆதிக்க இருள் அடர்ந்திருந்த தங்களுடைய நாட்டில் புரட்சியை வெற்றிகரமாகச் செய்து முடித்த கர்ம வீரர்களான லெனின், ட்ராட்ஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூல்களில் பெரும்பாலான வற்றை அலசி அலசி ஆராய்ந்தேன்.
1926ஆம் ஆண்டு முடிவில் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து நடத்தி வரும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டு விட்டேன்''.
இந்தியா ஒரு மாவீரனை மட்டுமன்று, ஓர் அறிவாளியையும் இழந்துவிட்டது.

ஜெ - சசி ஆடிய 'உள்ளே வெளியே' நாடகம் ------- ---இரா.உமா

தமிழ்நாட்டில் ஒரு நாடகம் நூறு நாள்கள் ஓடி முடிந்திருக்கிறது. நாம் யாருமே எதிர்பார்க்காத கதை  வசனங்களோடு, ஆனால் எதிர்பார்த்த முடிவோடு நாடகம் முடிந்திருக்கிறது. வேதா நிலையம் வெளியீட்டில், சோ சாமி இயக்கத்தில் மற்றும் மேற்பார்வையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர், 'காவிரி தந்த கலைச்செல்வி' ஜெயலலிதாவும் அவரது உயிர்த்தோழி சசிகலாவும் நடித்த உள்ளே  வெளியே நாடகம் அது.
மூன்று மாதங்களுக்கு முன்பு சசிகலா உள்ளிட்ட அவரது உறவினர்கள் சிலர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சசிகலாவைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்தே நீக்கி 'அக்கா' ஆணையிட்டார். அதைப்பற்றிப் பட்டி மன்றம் வைக்காத குறையாக விவாதங்களும், கருத்துகளும் மிகவும் பரபரப்பாக நடைபெற்றன.
இது திட்டமிடப் பட்ட நாடகம் என்று நம்மில் பலருக்கும் தெரிந்தது. ஆனால் அப்பாவி அ.தி.மு.க. தொண்டர்கள் நம்பினர். மகிழ்ச்சியில் மொட்டை எல்லாம் போட்டார்கள். இனியொரு சுதந்திரம் என்று சொல்லி இனிப்பெல்லாம் கொடுத்துக் கொண்டாடினர். ஆனால் கடைசியில் நடந்தது என்ன? 'அம்மா' என்று அழைத்த தொண்டர்களின் மொட்டைத் தலையில் மிளகாய் அரைத்து, 'அல்வா' கொடுத்துவிட்டார்.
அவாள்களுக்கு எப்போதும் ஒரு மரபு உண்டு. தாங்கள் செய்யும் தவறுகளைத் தாங்கிக் கொள்வதற்கு ஒரு தோள் வேண்டும். தங்களுக்காக தியாகம் செய்வதற்கு ஒரு தலை வேண்டும். அதுவும் சூத்ராளா இருந்தா இன்னும் தேவலை.  சசிகலா என்னும் பலி ஆடு மீண்டும் கொட்டடிக்குள் அழைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதனால்தான் சசிகலாவைத் தூக்கி எறிந்த போது மகிழ்ச்சி மழை பொழிந்தவர்கள், அவரை மீண்டும் ஜெயலலிதா வீட்டிற்குள் அழைத்துக் கொண்ட போது சாரலாய்க் கூட முணுமுணுக்கவில்லை.
சசிகலா உள்ளிட்ட மன்னார்குடி வகையறாக்கள் மீது 'நடவடிக்கை' என்னும் பரிகாரத்தின் மூலம் ஜெயலலிதாவின் நாற்காலிக்கு அடியில் இருந்த ஒட்டடைகள் சுத்தம் செய்யப்பட்டுவிட்டதாக முன்னாள், இந்நாள் நகைச்சுவை நடிகர்கள் சோ, எஸ்.வி. சேகர் போன்றவர்கள் 'நூல்' விட்டனர். ஆனால் இப்போது சசிகலாவுக்கு மட்டும் சுபாவ மன்னிப்பு' வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து யாருமே வாயைத் திறக்கவில்லை.
ஒரு வேளை சசிகலாவின் ஜாதகத்தில் ஏதாவது 100 நாள் 'தோஷம் கீஷம்' இருந்திருக்குமோ? அடுத்த தோஷம் எப்போ வருமோ?
ஏப்ரல் முதல் நாளில் நம்பிய எல்லோரையும் முட்டாள்களாக்கிவிட்டு, ஏப்ரல் 2ஆம் தேதி போயஸ் தோட்டத்திற்குள் மீண்டும் குடிபோய் விட்டார் சசிகலா. ஒரு நண்பர் சொன்னார், 'திருக்கடையூரில் மாலை மாற்றிக்கொண்டவர்களை யாராலும் பிரிக்க முடியாதாம்'!?

வாழ்க்கையின் வெற்றி நம்பிக்கையில்! ---- இலக்கியா

அண்மையில் வெளிவந்திருக்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பல வகைகளில் முக்கியத்துவம் பெறுவதாக அமைந் திருக்கின்றன. பத்திரிகைகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பற்றிய செய்திகள் ஒரு பக்கமும், தோல்வியடைந்த மாணவர்களின் தற்கொலைச் செய்திகள் மறுபக்கமும் வெளி வந்தன.
இது தோல்வி அன்று, தவற விடப்பட்ட வெற்றி வாய்ப்பு என்பதை முதலில் பெற் றோர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். காரணம் பெற்றோர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயத்தில்தான் பெரும் பான்மை மாணவர்கள் தற்கொலை முடிவுக்குப் போகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மூன்று மாணவர்களைப் பற்றி நாம் பேசாமல் இருக்க முடியாது. அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வது, மற்றவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெளிவுபடுத்தும்.
அதில் இரண்டு பேர் சிறைக் கைதிகள். கைதிகள் சிறையில் இருந்த படியே படிப்பதும், தேர்வு எழுதி பட்டம் வாங்குவதும் நடந்து கொண்டு தானே இருக்கிறது. அப்படி யிருக்க இவர்கள் இரண்டு பேரின் தேர்வு முடிவுகளில் என்ன சிறப்பு இருக்கிறது? கண்டிப்பாக இருக்கிறது.
அவர்கள் இருவரும் தூக்குத் தண்டனைக் கைதிகள். அதுவும் தூக்கிலிடப்படுவதற்கு நாள் குறிக்கப்பட்டு, பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறவர்கள். அதை விட இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள். பேரறிவாளன், முருகன் ஆகிய இருவரும்தான் அவர்கள்.
தலைக்கு மேல் தூக்குக் கயிறு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? பேரறிவாளன் 1200க்கு 1086 மதிப்பெண்களும், முருகன் 986 மதிப்பெண்களும் பெற்றிருக்கின்றனர். முருகன் கணக்குப் பதிவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருக்கிறார்.
கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டிருக்கும் நிலையிலும் இவர்கள் இருவரிடமும் வெளிப் பட்ட தன்னம்பிக்கையைப் பார்த்தாவது, வெற்றி வாய்ப்பைத் தவற விட்ட மாணவர்கள், மீண்டும் முயற்சிக்க வேண்டுமேயல்லாது, தற்கொலை செய்யும் சிந்தனைக்கு இடமளிக்கக் கூடாது. மூச்சடங்கும் வரை வாழ்வதற்கான கால அவகாசம் அனைவருக்கும் இருக்கிறது என்பதை உணர வேண்டும்.
உடல் உறுப்புக் குறைபாடுடையவர்கள் சாதிப்பதைப் பார்த்தும் கூட, எல்லா நலமும் கொண்டவர்கள் தன்னம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது?
இரண்டே முக்கால் அடி உயரமுடையவர் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி பிரியா. ஆனால் திருக்குறளைப் போல ஆழமான அறிவுடையவர். பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியனின் மகளான பிரியா பெற்ற மதிப்பெண்கள் 1200க்கு 1049. பொறியியல் படிக்க வேண்டும் என்பது இவரது விருப்பமாக இருக்கிறது.
இவர்களுக்கு நம்முடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாழ்க்கையை நம்பிக்கையோடு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்!

வழக்கு எண் 18/9 - படமன்று பாடம் இரா.உமா

சமூகத்தின் வேறுபட்ட நிலைகளிலுள்ளவர்களின் வாழ்க்கை ஒரு வழக்கில் வந்து சந்திப்பதைச் சொல்கிறது வழக்கு எண் 18/9 திரைப்படம்.
vazhakku_ennஒரு தரப்பினரின் வசதி வாய்ப்புகளினால் வரும் வரம்புமீறல்கள், மற்ற தரப்பினரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கங்களையும், பாதிப்புகளையும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
கதாநாயகன், கதாநாயகி உள்ளிட்ட பெரும்பான்மை பாத்திரங்களை ஏற்றிருப்பவர்கள் புதுமுகங்கள் என்றால் நம்பத்தான் முடியவில்லை. பின்னே நடிக்கச் சொன்னால், வாழ்ந்திருக்கிறார்களே!
தருமபுரி மாவட்டத்தின் வறண்டுபோன விவசாய நிலத்தில் தொடங்கும் கதை, வடநாட்டு முறுக்குக் கம்பெனியின் எண்ணெய்ச் சட்டிக்குள் விழுந்து வெந்து, சிங்காரச் சென்னையின் சிறை ஒன்றில் முடிகிறது.
விவசாயிகள் இன்றளவும் சந்தித்து வரும், வறுமை, கடன், கந்துவட்டி போன்ற பிரச்சனைகளை படத்தின் அடித்தளமாக வைத்திருக்கிறார் இயக்குனர்.
கந்துவட்டி கொடுமை தாங்காமல் சிறுநீரகத்தை விற்க நினைக்கும் தந்தையைத் தடுத்து நிறுத்தி, சிறு வயதிலேயே வடநாட்டு முறுக்குக் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன் வேலு. படிப்பின் மீது மிகுந்த ஆர்வமிருந்தும், வறுமை அவனைக் குழந்தைத் தொழிலாளியாக்கிவிடுகிறது. அதே நேரத்தில் அளவுக்கு அதிகமான வசதி வாய்ப்புகள் இருக்கின்ற பிள்ளைகள், படிப்பில் அக்கறையின்றி இருப்பதையும், படத்தின் சென்னைக் களம் காட்டுகிறது. ஒரு சமூகத்தின் முரண்பட்ட நிலையைக் காட்டுகிறார் இயக்குனர்.
பாலியல் தொழிலாளிகளும் மனிதர்கள்தான் என்பதை ரோசி என்னும் பாத்திரத்தின் மூலம் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இயக்குனருக்கு நமது பாராட்டுகள்.
பசியால் மயங்கிக் கிடக்கும் ஒருவனுக்கு (கதாநாயகன்) ஒரு வாய் உணவு கொடுக்கக் கூட மனமின்றி, கையில் உணவுப் பையுடன் கடந்து செல்லும், படித்த நல்லவர்களைவிட, சக மனிதனின் வலியறிந்து உதவும் மனிதாபி ‘மானமுள்ள’ ரோசி ஆயிரம் மடங்கு உயர்ந்தவர் என்பதை உரத்துச் சொல்கிறது அந்தக் காட்சி.
நன்றாக இருந்த காலத்தில், சதைக்கு அலைந்த இட்லிக்கடை நடத்தும் தாடிக்காரன், நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, ரோசியைப் பார்த்து, ‘கொஞ்சமாவது மானரோசம் இருக்கா’ என்று கேட்பது, ஆணாதிக்க சமூகத்தின் அசிங்கமான பக்கங்களுக்கு ஒரு சான்று.
திருந்தி வாழ நினைக்கும் ஒரு பாலியல் தொழிலாளியை வேட்டைநாய்களாய் துரத்தும் ஆண்களைக் கொண்டிருக்கும் இந்த சமூகம் குற்றவாளிகளின் சமூகம் என்று சொன்னாலும் தவறில்லை. கதாநாயகிக்கு அதிக காட்சிகளும் கிடையாது. நிறைய வசனங்களும் கிடையாது. ஆனாலும் கதாநாயகி ஜோதியைச் சுற்றித்தான் கதையின் ஓட்டம் இருக்கிறது.
சின்னச்சாமியாக வரும் சிறுவனின் இயல்பான நடிப்பு படத்தோடு நன்றாகப் பொருந்திப் போகிறது. பெண் வேடமிட்டு கூத்தில் ஆடும்போது, அவ்வளவு நளினம். நான்கு வரி வசனத்தை நாற்பது தடமை பேசியும், சரியாகப் பேசாத கதாநாகனையும், அதே வசனத்தை முகத்தில் உணர்ச்சிகளோடு அழகாக சின்னச்சாமி பேசுவதையும் காட்டும் காட்சி, புறக்கணிக்கப்படும் திறமைசாலிகளின் ஆதங்கத்திற்கு ஒரு சாட்சி.
பள்ளிக்கூடம் போகும் மகனுக்கு, கார், கைப்பேசி, அளவுக்கு அதிகமான பணம் என்று கொடுத்துவிட்டு, பணத்தின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும் அம்மாவின் பாத்திரம், நடைமுறையிலுள்ள பெரும்பான்மை பெற்றோர்களின் நகல். இப்படிப்பட்ட சூழலில் வளரும் பிள்ளைகள், என்னென்ன சீரழிவுகளில் சிக்கிக் கொள்கிறார்கள் என்று காட்டும் காட்சிகள் அத்தனையும் இன்று நடந்து கொண்டிருக்கும் உண்மைகளைப் பேசுகின்றன.
காவல் ஆய்வாளர் குமாரவேல் என்னும் பாத்திரம், முகம் காட்டாமல் வரும் அரசியல்வாதி பாத்திரம் ஆகியவை சட்டத்தின் நீதி ஏழைகளுக்கு எட்டாக்கனியாக இருக்க யார் யார் காரணம் என்பதை உணர்த்துகின்றன.
படத்தில் ஒரு பாடல்தான் இடம்பெற்றிருக்கிறது. அப்பாடலில், வேலு ஜோதியின் மேல் கொண்டுள்ள காதலை அழகாகக் காட்டியிருக்கிறார்கள். சண்டைக் காட்சிகள் கூட இல்லை. அதைப்பற்றி நினைவே நமக்கு வராமல், கதை நம்மை அப்படியே உள்ளிழுத்துக் கொள்கிறது.
ஒரு சமூகத்தில், குற்றங்கள் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. சில குற்றங்களில் தனி மனிதர்கள் குற்றவாளிகளாக நிற்கின்றனர். சில குற்றங்களில் சமூகமே குற்றவாளியாக நிற்கிறது. இந்தச் சங்கிலித் தொடரை உள்ளது உள்ளபடி படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
பெரிய கதாநாயகர்கள், பெரிய கம்பெனி, பிரம்மாண்டம், வெளிநாட்டுப் படப்பிடிப்பு இப்படி எதுவும் தேவையில்லை. நல்ல கதையும், நல்ல நடிகர்களும், கொஞ்சம் சமூக அக்கறையும் இருந்தாலே போதும் இதுபோன்ற சிறந்த படங்களைத் தருவதற்கு என்பதை தமிழ்த்திரை உலகம் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.
மக்களும் அந்தப் படங்களை வெற்றிப் படங்களாக்கி, அவர்களுக்கு ஊக்கத்தைத் தந்து கொண்டிருக் கிறார்கள். இதே பாதையில் திரைப்படங்களும், மக்களின் ரசனையும் பயணிக்குமானால், உலகத் திரைப்பட விழாக்களில் இன்னும் அதிகமான அளவில் நம்முடைய படங்கள் பங்கேற்கும் என்பது உறுதி.
வில்லுப்பாட்டுக் கலைஞர் கொத்தமங்கலம் சுப்பு அவர்களைப் பார்த்து,
‘கவிஞர் அவர்களே!
வானைப் பாடுங்கள்
வையகத்தைப் பாடுங்கள்
தேனைப் பாடுங்கள்
திங்களைப் பாடுங்கள் - அதோடு
எங்களையும் பாடுங்கள்!’ என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னராம்.
நாமும் கேட்கிறோம்,
‘மதிப்பிற்குரிய இயக்குனர்களே!
காதலைச் சொல்லுங்கள்
கடவுளைக்கூடச் சொல்லுங்கள்
அறிவியலைச் சொல்லுங்கள்
அழகியலைச் சொல்லுங்கள் - அப்படியே
இதுபோன்று சமூகப் பிரச்சனைகளையும்
தொடர்ந்து படமாக்குங்கள்!’

சிகரம் சின்னக்குத்தூசியாரும் சிறுமதியாளர்களும் ---- இரா.உமா

விளக்குகள் இல்லை. வாகனம் நிறுத்தும் இடத்தில் கூட்டம் நடந்ததால், மகிழுந்தின் முகப்பு விளக்குகள் தந்த மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. ஒலி பெருக்கி இல்லை. அவரவர்க்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சத்தமாகப் பேசினார்கள். இருக்கைகள் கிடையாது. பார்வையாளர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். வயதில் சிறியவர்கள் நன்றாகச் சப்பணமிட்டு நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர். வயது முதிர்ந்த பெரியவர்கள், கால்களைப் பாதி மடக்கியும், அதுவும் முடியாதவர்கள் முழுவதுமாக நீட்டியும் உட்கார்ந்திருந்தனர். இத்தனை இடர்ப்பாடுகள் இருந்த போதிலும் கூட்டம் சிறப்பாகவும், உணர்ச்சிகரமாகவும் நடந்தது.
சரி, என்ன கூட்டம், எங்கு நடந்தது, எப்போது நடந்தது?
கூட்டம் நடந்த விதத்தைப் பார்த்தால் அவசரநிலைக் காலத்தில் நடந்த இரகசியக் கூட்டம் போலத் தெரிகிறதே என்று நீங்கள் கேட்க நினைப்பது புரிகிறது. ஆனால் உங்கள் ஊகம் தவறானது.
கூட்டம் நடந்தது 1975இல் இல்லை - தமிழ்த் தேசியத் தலைவர்கள் போற்றிப் பாராட்டும் புரட்சித்தலைவியின் ஆட்சி நடக்கும் 2012 (15.06.2012)இல்தான் இந்தக் கூட்டம் நடந்தது. நடந்த இடமும் ஊருக்கு வெளியே உள்ள ஏதோ ஒதுக்குப்புறமான பாழடைந்த கட்டடமும் இல்லை - தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில், பரபரப்பான அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலக வளாகம்தான் கூட்டம் நடந்த இடம். கூட்டமும், அரசுக்கு எதிரான போராட்ட வியூகம் வகுப்பதற்கான ‘தடைசெய்யப்பட்ட இயக்கத்தின்’ கூட்டம் இல்லை - திராவிட இயக்கச் சிந்தனையாளரும், மூத்த பத்திரிகையாளருமான தோழர் சின்னக்குத்தூசியாரின் பிறந்த நாள் விழா மற்றும் அவரது பெயரில் சிறந்த கட்டுரைகளுக்கும், வாழ்நாள் சாதனையாளருக்கும் பரிசுகளும், விருதும் வழங்குவதற்கான கூட்டம், ஓர் இலக்கியக் கூட்டம் அவ்வளவுதான். அங்கே கூடியவர்கள் ‘தேசத்துரோகி’களும் இல்லை - இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, திமுகவைச் சேர்ந்த திருச்சி செல்வேந்திரன், மூத்த திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, பேராசிரியர் சரசுவதி, மூத்த பத்திரிகையாளர் இரா. ஜவஹர், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களும், பத்திரி கையாளர்கள், திராவிட இயக்க உணர்வாளர் கள், சின்னக்குத்தூசியாரிடம் பெருமதிப்பு கொண்டுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்.
ஜனநாயகம் வாழ்வாங்கு வாழ்வதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் காலத்தில், ஓர் இலக்கியம் கூட்டம் இப்படி ஒரு நிலையில் நடக்க வேண்டிய சூழல் எப்படி ஏற்பட்டது?
ஜுன் 15 சின்னக்குத்தூசியாரின் பிறந்தநாள். கடந்த ஆண்டு மே மாதத் தோடு அவர் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக் கொண்டார். எழுத்துலகில் அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், அவர் இல்லாத வெற்றிடத்தை நிரப்பவும் கருதிய அவர் மீது பெருமதிப்புக் கொண்டிருக்கும் அவருடைய தோழர்கள், ‘சின்னக் குத்தூசியார் நினைவு அறக்கட்டளை’ யைத் தொடக்கினர். சமூக அக்கறையுடன் எழுதிவருகின்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முகமாக ஆண்டுதோறும் விருதுகளும், பரிசுகளும் வழங்கிட வேண்டும் என்பது அறக்கட் டளையின் நோக்கம்.
அதன்படி, கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு, மூன்று கட்டுரைகள் சிறந்த கட்டுரைகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த அரசியல் கட்டுரையாக, இரா. உமா எழுதிய ‘மரணதண்டனை: மானுட மறுப்பு’ என்னும் கட்டுரையும், சிறந்த சமூக - பண்பாட்டுக் கட்டுரையாக பழ. அதியமான் எழுதிய ‘இறப்பில் உயிர்க்கும் பண்பாடு’ என்னும் கட்டுரையும், சிறந்த பொருளாதாரக் கட்டுரையாக கி. இலக்குவன் எழுதிய ‘ஏகாதிபத்தியங்களின் எண்ணெய் அரசியல்’ என்னும் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டன. புலவர் வெற்றியழகன், அவருடைய தமிழ்த் தொண்டிற்காக வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
இவ்விருதினையும், பரிசுகளையும் 15.06.2012 அன்று சின்னக்குத்தூசியாரின் 78ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அறக்கட்டளை சார்பில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வழங்க முடிவுசெய்து, தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டிடத்தில் உள்ள அரங்கம் முறைப்படி முன்பணம் கட்டிப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
சரியாக, நிகழ்ச்சிக்கு முதல் நாள், அரங்கத்திற்குச் செய்யப்பட்ட முன்பதிவை ரத்து செய்துவிட்டதாகக் கூறி அதற்கான ஆணையையும், முன்பணத்தையும் கொடுத்துவிட்டனர். வேறு வழியின்றி, நீதியரசர் சந்துரு அவர்களின் முன்பு இவ்வழக்கினை அறக்கட்டளை நிர்வாகிகள் எடுத்துச்செல்ல, நடந்த அநீதியை உணர்ந்து கொண்ட நீதியரசர், ‘உடனே அதே அரங்கத்தில் நிகழ்ச்சி நடக்க அனைத்து விதமான ஒத்துழைப்பினையும் தரவேண்டும்’ என்று அரசு வழக்கறிஞக்கு ஆணையிட்டார்.
ஆனால் நடந்ததோ வேறு. ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசிகள், அரங்கத்தைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். சிறப்பு அழைப்பாளர்கள் உள்பட அனைவரும் வந்து காத்துக்கொண்டிருந்த நிலையில், வளாகத்தில் இருந்த வாகன நிறுத்துமிடத்தில், கட்டுரையின் முதல் பத்தியில் குறிப்பிட்டதைப் போன்ற சூழ்நிலையில் கூட்டம் நடந்தது. ஏறத்தாழ 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேசிய அனைவருமே ‘ஜெயா அரசின் கருத்துரிமைக்கு எதிரான போக்கி’னைக் கண்டிக்கத் தவறவில்லை.
ஓர் இலக்கியக் கூட்டத்திற்கு இத்தனை இடர்ப்பாடுகளைச் செய்ய வேண்டிய தேவை என்ன வந்தது?
சின்னக்குத்தூசியார் கலைஞரின் மீது அளவற்ற ஈடுபாடும், அன்பும் கொண்டவர். முரசொலியில் தொடர்ந்து எழுதியவர். காஞ்சி சங்கராச்சாரியையே வந்துபார் என்றவர். அக்கரகாரத்தில் பிறந்திருந்தாலும், அறிவாசான் பெரியாரின் கொள்கையில் இம்மியும் சமரசம் செய்து கொள்ளாதவர். துணிச்சல் மிக்க பத்திரிகை ஆசிரியரான நக்கீரன் கோபாலோடு தோழமை உடையவர். இவை எல்லாம்தான் தடைக்குக் காரணம் என்ற முடிவுக்கு நம்மை வரவைக்கிறது, ஜெயா அரசின் அணுகுமுறை.
திராவிட இயக்கச் சார்புடையவர் என்றபோதும், எல்லாத் தரப்புப் பத்திரிகையாளர்களுக்கும், அவர்கள் கேட்கும் செய்திகளை எந்தவித வேறுபாடும் காட்டாமல் வாரி வழங்கி வந்த பல்கலைக்கழகம் அவர். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலமாக அவருடைய எழுதுகோல் எழுத்துலகில் பயணித்திருக்கிறது. சமூகத்தின் எல்லா பேதங்களுக்கும் அப்பாற்பட்டு வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர். அப்படிப்பட்ட ஒரு மனிதரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு இந்த அரசு இடையூறு செய்திருக்கிறது என்றால், இந்தப் போக்கினை ஆட்சித் தலைமையின் அறியாமை என்பதா, ஆணவம் என்பதா?
இவ்வழக்கு விசாரணையின்போது, நீதியரசர் சந்துரு, “சின்னக்குத்தூசி என்கிற ஒரு பத்திரிகையாளர் தன் வாழ்க்கையில் திருமணமே செய்த கொள்ளாமல், சுமார் 65 ஆண்டுகளுக்கு மேலாகத் திருவல்லிக்கேணியில் ஒரு மேன்சன் அறையில் புத்தகங்களுக்கு நடுவிலேயே வாழ்ந்தவர். அவர் கடந்த 50 ஆண்டுகளாக இளம் பத்திரிகையாளர்களின் என்சைக்ளோபீடியாவாகவே இருந்துள்ளார். பத்திரிகையாளர்கள், பழைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் பழைய தலைவர்கள் பற்றிய சந்தேகங்களை எப்போது வேண்டுமானாலும் அவரிடம் சென்று கேட்டுக் கொள்ளலாம். காமராஜரிலிருந்து இன்றுள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும் அவர் நெருக்கமாக இருந்தபோதிலும், அதைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க ஒருபோதும் முயன்றதில்லை. அவரது கட்டுரைகள் அனைத்தும் சமூக அக்கறையுடன்தான் இருக்கும். அப்படிப்பட்ட மூத்த பத்திரிகையாளர் ஒருவரது பெயரில் இளம் பத்திரிகையாளர்கள் டிரஸ்ட் ஆரம்பித்து விழா நடத்தி உதவிகள் செய்வதைத் தடுப்பது சரியல்ல” என்று நீதிமன்றத்திலேயே புகழ் மாலை சூட்டினார்.
முன்பு ஒரு முறை, பொதுவுடைமைப் போராளி ஐ.மாயாண்டி பாரதி குறித்தும் நீதிமன்றத்தில் பெருமைபட நீதியரசர் சந்துரு கருத்துரைத்திருக்கிறார். ‘கற்றோரைக் கற்றோரே காமுறுவர்’ என்பதைப் போல, இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளனுக்கும் கிடைத்திராத சிறப்பினைச் சின்னக்குத்தூசியாருக்குத் தந்திருக்கிறார் நீதியரசர் சந்துரு.
இத்தனை பெருமைமிகு பத்திரிகையாளருக்கு இழைக்கப்பட்டுள்ள இந்த அவமதிப்பு, பத்திரிகை உலகில் பெரிய அதிர்வுகள் எதையும் ஏற்படுத்தவில்லை என்பது வேதனைக்குரியது. ஒரு சில பத்திரிகைகள் இது தொடர்பான செய்திகளை வெளியிட்டன. திமுக தலைவர் கலைஞர் கண்டன அறிக்கை வெளியிட்டார். 
ஆனால் பத்திரிகையாளர்கள் வாய்மூடி அமைதியாக இருந்தனர். ஒரு சிறு கண்டனக் கூட்டம் கூட போடப்படவில்லை. ஒரு மூத்த பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட அவமதிப்பைக் கண்டிக்க இவர்களுக்கு ஏன் இவ்வளவு தயக்கம்? கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறையைக் கண்டித்தால் தண்டிக்கப் படுவோம் என்ற அச்சமா? எது அவர்களைத் தடுத்தது என்று நமக்குப் புரியவில்லை. எது எப்படி இருப்பினும் பத்திரிகையாளர்களின் இந்தப் பின்வாங்கல் போக்குக் கண்டிக்கத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
சக பத்திரிகையாளர்களின் தன்மைதான் இப்படி இருக்கிறது என்றால், அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட ‘நினைவில் அகலா நண்பர்கள்’ கூடத் தங்கள் தோழனுக்கு, இந்த அரசு இழைத்த அவமதிப்பைக் கண்டிக்க முன்வரவில்லை. அய்ம்பது ஆண்டுகால நட்பை விட, அம்மையாரின் ஆணவப்போக்கை விமர்சித்துவிடக் கூடாது என்பதுதான் அவர்களுக்கு முக்கியமாகப்படுகிறது போலும்.
இதழியல் அறத்தை இறுதி வரைக் கடைப்பிடித்து, ஒரு பத்திரிகையாளர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார் சின்னக்குத்தூசியார். அவருடைய பெருமையை, இந்தச் சிறுமதியாளர்களின் சலசலப்புகளால் குறைத்துவிட முடியாது.